தைப்பூசத்தன்று பத்துமலை முருகன் திருத்தலத்திற்கு பிரதமர் அன்வார் வருகை

கோலாலம்பூர், ஜன 31 – இவ்வாரம் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 5-ஆம் தேதி வரவேற்கப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு, தலைநகர் பத்துமலை முருகன் திருத்தலத்திற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்பு வருகை புரியவிருக்கிறார். இன்று, செய்தியாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில், கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ ஆர். நடராஜா இதனை தெரிவித்தார்.
இதனிடையே, தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான வெள்ளி ரத ஊர்வலம், அன்னை ஶ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் வரும் வெள்ளிக்கிழமை பிப்ரவரி 3-ஆம் தேதி இரவு மணி 9 அளவில் புறப்படும்.
அருள்மிகு ஶ்ரீ வள்ளித் தெய்வானை சமேத ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி , வண்ண விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் எழுந்தருளி, மங்கல மேளநாதஸ்வர இசை முழங்கிட பக்தர்கள் புடை சூழ பத்துமலையை நோக்கி பயணிப்பார்.
குறிப்பிட்ட சாலைகளை கடந்து வெள்ளி ரதம் சனிக்கிழமை, மாலை 3 அளவில் பத்துமலை வந்தடையும்.
பின்னர், மாலை ஐந்தரைக்கு மேல் 6 மணிக்குள் , சேவல் கொடி ஏற்றப்பட்டு 2023 –ஆம் ஆண்டின் தைப்பூச திருவிழாவை , டான் ஶ்ரீ ஆர் . நடராஜா அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார்.
இதனிடையே, மேற்கு குகைக்கு செல்லும் நான்கு படிக்கட்டுகளில் இடப்புறம் உள்ள இரண்டு படிக்கட்டுகள் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் ஏறிச் செல்வதற்கும் , நடுவில் உள்ள 3-வது படிக்கட்டு காவடி மற்றும் பால்குடம் ஏந்தி செல்லும் பக்தர்களுக்கும், நான்காவதாக உள்ள படிக்கட்டு பக்தர்கள் இறங்கிச் செல்வதற்கும் என ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில், நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற வரும் பக்தர்களின் வசதிக்காக, ஆற்றங்கரை சுத்த செய்யப்பட்டு , சீரமைக்கப்பட்டு புதிய தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக, மலை அடிவாரத்தில் சனீஸ்வரன் கோயிலுக்கு அருகில் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. முடிகாணிக்கை செய்தப் பின் சுடுநீரில் குழிப்பாட்டும் வசதியுமுண்டு.
தைப்பூசத்தின் போது பக்தர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய ஏறத்தாழ 2,000 போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என டான் ஶ்ரீ ஆர். நடராஜா தெரிவித்தார்.