
ஜோர்ஜ் டவுன் , பிப் 3 – எதிர்வரும் பிப்ரவரி 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத்தை கொண்டாடும் பக்தர்கள் குறைவான அல்லது ஒரு தேங்காய் உடைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேங்காய் உடைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பணம், இன்னும் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் சமூகத்தின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பயன்படுத்தப்படலாம் என பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவு அதிகாரி என் வி சுப்பாராவ் தெரிவித்தார். . தைப்பூசத்தின் போது தேங்காய் உடைப்பது இந்து பக்தர்களால் கடைப்பிடிக்கப்படும் ஒரு பாரம்பரிய சடங்கு. முழு உறுதியுடனும் பக்தியுடனும் செய்யப்படும் கடவுளின் பாதங்களில் ஒருவரின் அகங்காரத்தை சரணடைவதன் அடையாளப் பிரதிநிதித்துவம் இது என அவர் கூறினார்.
ஆனால் சீன சமூகத்தைச் சேர்ந்த பல பக்தர்கள் தேங்காய் உடைக்கும் சடங்கிற்கு உள்ள காரணங்களைத் தவறாகத் புரிந்துகொண்டுள்ளனர். எவ்வளவு தேங்காய் உடைக்கிறோமோ அவ்வளவு அதிர்ஷ்டம் தங்களுக்கு கிடைக்கிறது என அவர்கள் நினைக்கிறார்கள். குறிப்பாக தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் ஆயிரக்கணக்கான தேங்காய்களை வாங்க பணம் செலவழிப்பது விவேகமானது அல்ல. அதோடு தேங்காய் அதிக விலைக்கு விற்கப்பட்டால், பயனீட்டாளர்கள் அதனை வாங்கக்கூடாது என்றும் சுப்பராவ் கேட்டுக்கொண்டார்.