
கோலாலம்பூர் , ஜன 12 – அடுத்த மாதம் பிப்ரவரி ஐந்தாம் தேதி நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பத்துமலை முருகன் திருத்தல பகுதியில் கடைகளை போடுவதற்கான அனுமதி இவ்வாரம் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 15 – ஆம் தேதி தொடங்கி வழங்கப்படும்.
எனினும் , கடந்த காலங்களை காட்டிலும் இவ்வாண்டு குறைவான கடைகளே போடப்படுமென , கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான் ஶ்ரீ நடராஜா கூறியிருக்கின்றார்.
இதனிடையே, தைப்பூசத்திற்கான வழிபாட்டு நேரங்கள் கட்டுபடுத்தப்பட்டிருப்பதாக அண்மையில் வெளியாகி இருக்கும் தகவல் உண்மை இல்லை என அவர் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
மாறாக, கோவிட் தொற்று பரவல் காரணமாக சுகாதார அமைச்சிலிருந்து கொடுக்கப்படகூடிய SOPகளை பின்பற்றி பாதுகாப்பு அம்சங்களை முன்னிறுத்தி பக்தர்களுக்காக வழிபாட்டு முறைகளும் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
இவ்வேளையில், தைப்பூசத்தை வரவேற்கும் வகையில் ஆலய பராமரிப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
ஆலயம் பொலிவுடன் காட்சியளிக்க குகை ஆலயத்துக்கான படிகட்டுகளுக்கு மறுவர்ணம் பூசப்பட்டு வருவதாக நடராஜா கூறினார்.