புக்கிட் ஜாலில், செப்டம்பர் -21 – அக்டோபர் 14-காம் தேதி கூடும் மக்களவைக் கூட்டத்தின் போது தைரியமிருந்தால் தமக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருமாறு, எதிர்கட்சியினருக்கு பிரதமர் சவால் விடுத்துள்ளார்.
“நான் பதவி விலக வேண்டும் என சிலர் வற்புறுத்தி வருகின்றனர். அதற்கென்று ஒரு முறை இருக்கிறது. உண்மையிலேயே நான் போக வேண்டுமென்று நீங்கள் நினைத்தால் என் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வாருங்கள் பார்ப்போம்” என்றார் அவர்.
அத்தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டால், அதற்கு தாம் நிச்சயம் அனுமதி வழங்குவேன் என்றும், ஓடி விட மாட்டேன் என்றும் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
புக்கிட் ஜாலில், அக்சியாத்தா அரேனா அரங்கில் நேற்றிரவு PKR கட்சி ஏற்பாடு செய்திருந்த மக்கள் பேரணியில் உரையாற்றும் போது அவர் அவ்வாறு சூளுரைத்தார்.
பெரிக்காத்தான் நேஷனலுக்கு அன்வார் அவ்வாறு சவால் விடுவது இது முதன் முறையல்ல.
கடந்தாண்டு மே மாதமும் இவ்வாண்டு ஜனவரியிலும் அவர் அதே சவாலை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.