
தைவான், செப் 19 – தைவானை 6.8 மாக்னிதியூட்டாக (magnitude) பதிவான வலுவான நிலநடுக்கம் உலுக்கியதில் மூன்று மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது.
இரயில் ஒன்று தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
எனினும், அவ்வொரு சம்பவங்களிலும் இதுவரை உயிருடற் சேதம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட அதன் 70 வயது உரிமையாளரும், அவரது மனைவியும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
எஞ்சிய, 39 வயது பெண் ஒருவருடன் அவரது ஐந்து வயது பெண் பிள்ளையும் தேடப்பட்டு வருகின்றனர்.
தைவானில் கடந்த சனிக்கிழமை மாலை தொடங்கி நில அதிர்வுகள் தொடர்ந்து உணரப்பட்டு வந்தன.
அதனை அடுத்து, நேற்று சீசாங் (Chishang) எனுமிடத்தில், ஏழு கிலோமீட்டர் ஆழத்தில் மையமிட்டிருந்த நிலநடுக்கம் உலுக்கியது.
மற்றொரு நிலவரத்தில், ஊலி (Yuli) புறநகர் பகுதியில், பாலம் ஒன்று இடிந்து விழுந்தது.
அச்சம்பவத்தில் மூவர் காணாமல் போயிருக்கலாம் என நம்பப்படுவதாக, உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரபல சுற்றுலாத் தலம் ஒன்றை இணைக்கும் அப்பாலம் இடிந்து விழுந்ததால், 400-ருக்கும் அதிகமான சுற்றுப் பயணிகள் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர்.
தையுவன் (Taoyuan) நகரில் ஐந்து மாடி கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்ததில், 36 வயது ஆடவர் காயமடைந்தார்.
தைவானின் வட பகுதியை உலுக்கிய அந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், தலைநகர் தைபே (Taipei) வரை உணரப்பட்டது.
நிலநடுக்கத்தை அடுத்து, தைவானுக்கு அருகில் அமைந்திருக்கும் ஜப்பானிய மாநிலங்களில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் மீட்டுக் கொள்ளப்பட்டது.