தைப்பே, ஏப்ரல்-5, தைவானை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கி சுமார் 30 மணி நேரங்களை கடந்துள்ள நிலையில், பிரபல சுற்றுலாத் தலமான Taroko தேசியப் பூங்காவில் இருந்த 41 பேரை இன்னமும் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
3 பேருந்துகளில் வந்த 30 தங்கும் விடுதித் தொழிலாளர்களும் அவர்களில் அடங்குவர்.
வியாழக்கிழமை பிற்பகல் வரைக்குமான தகவலின் படி, மீட்புக் குழு அவர்களை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என தெரிகிறது.
சம்பவத்தின் போது உயிர் தப்பிய 24 சுற்றுப் பயணிகளும் 5 தொழிலாளிகளும் அருகிலுள்ள கல் குடிலொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, நில நடுக்கத்தைத் தொடர்ந்து லட்சக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், அது மெல்ல சீரடைந்து வருகிறது.
எனினும் ஏராளமான வீடுகள் குடிநீர் வசதியின்றி தவிக்கின்றன.
எனினும் சனிக்கிழமைக்குள் அந்நிலைமையில் முன்னேற்றம் காணப்படும் என அரசு அதிகாரிகள் நம்பிக்கைத் தெரிவித்தனர்.
சேதமடைந்த 80 தொலைத்தொடர்பு கோபுரங்களில் இதுவரை 30 கோபுரங்கள் சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
புதன்கிழமை காலை ரிக்டர் அளவைக் கருவியில் 7.2 டாக பதிவாகிய வலுவான நில நடுக்கம் தைவானை உலுக்கியது.
அதில் இதுவரை 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர்; 700-க்கும் மேற்பட்டோர் சரிந்து விழுந்த கட்டடங்கள், வீடுகள், சாலைகள் போன்றவற்றின் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மீட்புப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.