ரியாத், நவம்பர்-12 – இஸ்ரேலின் வன்முறையாட்டம் அடங்காத காரணத்தால், ஐநா அமைப்பிலிருந்தே அதனை நீக்க வேண்டுமென மலேசியா வலியுறுத்தியுள்ளது.
பாலஸ்தீன மக்களுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலனுக்காக அனைத்துலகச் சமூகம் இஸ்ரேலை ஒதுக்கி வைக்க வேண்டும்.
அதில் இனியும் காலம் தாழ்த்தக் கூடாது என, சவூதி அரேபியாவில் நடைபெற்ற அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் அவசர உச்ச நிலை மாநாட்டில் பேசிய போது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
பாலஸ்தீனத்தில் தொடங்கி, லெபனான், ஈரான் வரை இஸ்ரேல் தனது வன்முறையைத் தொடருகிறது.
போர் தொடுக்கும் இடங்களில் அப்பாவி மக்களைக் கொல்வதோடு, அவர்களுக்கு ஐநா அனுப்பி வைக்கும் மருந்துகள், உணவுகள் மீதும் குறி வைத்துள்ளது.
இப்படி இஸ்ரேல், அனைத்துலகச் சட்டத்தை தொடர்ந்து மீறி வருவதால் அதனை ஒதுக்கி வைத்து தண்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை என டத்தோ ஸ்ரீ அன்வார் மலேசியாவின் நிலைபாட்டை உறுதியாகச் சொன்னார்.