செலாமா, டிசம்பர்-27 – நாட்டில் தொடர்கதையாகி வரும் மிருகவதை சம்பவங்களில் புதிதாக, பேராக் செலாமாவில் நடந்துள்ள கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
டிசம்பர் 22-ஆம் தேதி அங்குள்ள தோட்டமொன்றில் தவறான பாதையில் புகுந்த ஒரே காரணத்திற்காக ‘குட்டி’ என்ற நாயை அம்பெய்தி தாக்கியுள்ளனர்.
அதில் படுகாயமடைந்து நாய் துடிதுத்து மாண்டதாக, SAFM எனப்படும் கைவிடப்பட்ட விலங்குகளுக்கான மலேசிய சங்கத்தின் தலைவர் ஆர். கலைவாணன் கூறினார்.
அச்சம்பவத்தைக் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய கலைவாணன், நேரில் பார்த்த சாட்சிகள் முன்வந்து விசாரணைக்கு உதவ வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
சம்பந்தப்பட்டோர், அருகிலுள்ள போலீஸ் நிலையங்களிலோ அல்லது கால்நடை சேவைத் துறையிலோ புகாரளிக்கலாம்.
அப்போது தான் விசாரணை நடத்தி, தவறிழைத்தோருக்கு தக்க தண்டனை வாங்கித் தர முடியுமென்றார் அவர்.
பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகள் தொடருவது வேதனையளிக்கிறது.
எனவே, மிருகவதைக் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வகை செய்யும் 2015 விலங்குகள் நல பாதுகாப்புச் சட்டத்தின் 30-வது பிரிவு முழுமையாக நடைமுறைக்கு வர வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
அப்பிரிவின் கீழ், குற்றவாளிகளுக்கு 100,000 ரிங்கிட் அபராதமும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.