
மலாக்கா, நவம்பர் 21 – சில சமயங்களில் நாம் சமிக்ஞை விளக்கை கவனிக்காமல் தவறவிட்டிருப்போம்.
குறிப்பாக, விளக்கு சிவப்பு நிறத்தில் மாறுவதற்கு முன் வேகமாக செல்ல முனைப்பு காட்டி இருப்போம்.
எனினும், மலாக்காவில் இருக்கும் சாலை சமிக்ஞை விளக்கு ஒன்றை, வாகனமோட்டிகள் கவனிக்காதது போல அவ்வளவு எளிதாக தவறவிட்டு கடந்து சென்று விட முடியாது.
அந்த சமிக்ஞை விளக்கை பயன்படுத்திய சாண்ட்ரா என்பவர், கண்ணை பறிக்கும் வகையில் ஒளிரும் அந்த சமிக்ஞை விளக்கை தனது @sandrahanayu எனும் டிக் டொக் கணக்கில் பதிவிட்டுள்ளதை தொடர்ந்து அது வைரலாகியுள்ளது.
சாலையோரம் உள்ள “தொம்யாம்” கடைகளில் இருக்கும் வண்ணமயமான விளக்குகள் அல்லது ஸ்டார் வார்ஸின் இரசிகராக இருந்தால் அதன் ஒளிமயமான விளக்குகளை கற்பனை செய்து பாருங்கள். அந்த விளக்கொளி, சாலை சமிக்ஞை விளக்கிற்கு மேலே இரு புறத்திலும் ஒளிரும் வகையில் இருந்தால் எப்படி இருக்கும்?
அதனால் தான் அவ்வழியே செல்லும் வாகனமோட்டிகள் அந்த சமிக்ஞை விளக்கை தவற விடவே முடியாது என சண்ட்ரா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவுக்கு இணையவாசிகள் பலர் நேர்மறையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
“ஒவ்வொரு முறையும் அவ்வழியே செல்லும் போது, அதனை நான் தொம்யாம் கடை என்றே சொல்கிறேன்” என ஒருவர் பதிவிட்டுள்ள வேளை ;
“எவ்வளவு விளக்குகள். அதனை தவறவிடவே முடியாது” என மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.