
தைப்பிங், செப் 11 – தங்களைப் போலீஸ்காரர்கள் மற்றும் பொருட்களை விநியோகிப்பவர்கள் என கூறிய ஐந்து ஆடவர்களைக் கொண்ட மோசடி பேர்வழிகள் தனியார் திட்ட நிறுவன பெண் நிர்வாகி ஒருவரைத் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு 400,0000 ரிங்கிட்டை மோசடி செய்துள்ளனர். தொலைபேசி மோசடி திட்டத்தினால் 57 வயதுடைய அந்த பெண் 400,000 ரிங்கிட் பணத்தை இழந்துள்ளது குறித்து போலீசில் புகார் செய்துள்ளார் என பேரா போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யுஸ்ரி ஹஸ்ஸான் பஸ்ரி. ஆகஸ்டு 18 ஆம் தேதி ஆடவர் ஒருவரிடமிருந்து அந்த பெண் தொலைபேசி அழைப்பை பெற்றுள்ளார். அந்த அழைப்பில் தமது முகவரிக்குக் கிரெடிட் கார்டு, அதற்கு அடையாள சிப்ஸ் மற்றும் 100 போலி பண நோட்டுக்கள் இருப்பதாவும் இவை சரவாக்கிலிருந்து அஞ்சலில் வந்திருப்பதாக அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.
அந்த நபர் தமது அடையாளத்தை கூற மறுத்துவிட்டதோடு அலோஸ்டார் மற்றும் புக்கிட் அமானைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகளிடம் பேசும்படி தொலைபேசியை வைத்துவிட்டார். அதன்பின் அந்த பெண்ணிடம் பேசிய நால்வர் அவரது வங்கி சேமிப்பு விவரங்களை எல்லாம் பெற்றுக்கொண்டு இரண்டு வங்கிகளில் அப்பெண்ணின் சேமிப்பு கணக்குகளில் இருந்த நான்கு லட்சம் ரிங்கிட்டை 11 முறை பணப்பட்டுவாடா செய்துள்ளனர். ஆகஸ்டு 18ஆம் தேதி முதல் செப்டம்பர் 6ஆம் தேதிக்குள் அந்த பெண்ணின் வங்கியிலுள்ள அனைத்து தொகைகளையும் அந்த மோசடிக் கும்பல் மீட்டுள்ளதாக அப்பெண் புகார் செய்திருப்பதாக முகமட் யுஸ்ரி தெரிவித்தார். இதனிடையே முன்பின் அறிமுகமில்லாத நபர்களிடம் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டாமென பொதுமக்களை முகமட் யுஸ்ரி கேட்டுக்கொண்டார்.