Latestஉலகம்

தனது புதிய ‘ஸ்மார்ட்வாட்சை’ அமெரிக்காவில் விற்பனை செய்ய ஆப்பிள் நிறுவனத்திற்கு தடை

வாஷிங்டன், ஜனவரி 18 – அண்மையில் வெளியீடு கண்ட, தனது புத்தம் புதிய “ஸ்மார்ட்வாட்ச்” மாடலை, அமெரிக்காவில் விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்துமாறு ஆப்பிள் நிறுவனத்துக்கு அந்நாட்டு கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுகாதார பராமரிப்பு நிறுவனமான மாசிமோவுடன் ஏற்பட்ட காப்புரிமை சர்ச்சையை தொடர்ந்து நீதிமன்றம் அந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

எனினும், உலக பிரசித்தி பெற்ற ஐ-போன் தயாரிப்பாளரான ஆப்பிள், மேல்முறையீட்டு முடிவுக்காக காத்திருப்பதால், அந்த தடை உத்தரவு உள்நாட்டு நேரப்படி வியாழக்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தென் கலிபோர்னியாவை தளமாக கொண்டு செயல்படும் மசிமோ நிறுவனம், அமெரிக்க சர்வதேச ஆணையத்திடம் புகார் செய்ததை தொடர்ந்து, கடந்தாண்டு அக்டோபரில், இரத்தத்தில் பிராணவாயு அளவை கண்டறியும் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்தை உள்ளடக்கி இருக்கும் ஆப்பிள் வாட்ச் மாடல்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது.

அதனால், தனது சீரிஸ் 9 மற்றும் அல்ட்ரா 2 ஸ்மார்ட்வாட்ச்களில் இருந்து அந்த தொழில்நுட்பத்தை அகற்ற ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததாக கூறிக் கொள்ளும் மாசிமோ, அது குறித்து தெரிந்து கொள்ள ஆப்பிள் நிறுவனம் தனது முதன்மை பணியாளர்களை அணுகியதாக குற்றம்சாட்டியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!