
கோலாலம்பூர், ஜன 17 – நாட்டில் பெரிய அளவில் கொண்டாட்டப்படும் முக்கிய பண்டிகைகளின் போது தொழிலாளர்களுக்கு ஒரு மாதச் சம்பளத்தை சிறப்புத் தொகையாக வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்துமாறு அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதன் வழி, பண்டிகையை வரவேற்பதில் தொழிலாளர்கள் எதிர்நோக்கியிருக்கும் நிதிச் சுமையைக் குறைக்க முடியுமென, SPCAAM எனப்படும் மலேசிய சமூக பாதுகாப்பு பங்களிப்பாளர் ஆலோசக சேவை சங்கத்தின் தலைவர் J.Solomon நம்பிக்கை தெரிவித்தார்.
ஒவ்வோராண்டும் சீனப் பெருநாள், ஹரி ராயா, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய 4 பண்டிகைகளுக்கு இந்த சிறப்பு தொகை வழங்கலாமென அவர் பரிந்துரைத்தார்.
நாட்டில் சில முதலாளிகளும் , அரசாங்கமும் ஆண்டுக்கு ஒரு முறை சிறப்புத் தொகையை ஊக்குவிப்பாக தொழிலாளர்களுக்கு வழங்கினாலும், சில முதலாளிகள் தவணை முறையில் மீண்டும் செலுத்தும் வகையில் கடனாகவோ முன்பணமாகவோ வழங்குகின்றனர்.
எனவே, தொழிலாளர்களுக்கு பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதை கட்டாயமாக்கும் வகையில் அரசாங்கம் சட்டமொன்றை இயற்ற வேண்டுமென NUBE எனப்படும் வங்கி ஊழியர்களின் தேசிய சங்கத்தின் தலைமைச் செயலாளர் Solomon கேட்டுக் கொண்டார்.