
கிள்ளான் செப் 9 -மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் எச்.ஆர்.டி கோர்ப், நியோஸ் எனப்படும் தொழில் பாதுகாப்பு சுகாதாரம் உட்பட பல நிறுவனங்கள் வழங்கும் தொழில் திறன் கல்வி பயிற்சி திட்டங்களில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்கும்படி மனித வள அமைச்சர் வ. சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டு மக்களின் நலனுக்காக அரசாங்கம் பல தொழில் திறன் கல்வி பயிற்சி திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இத்திட்டங்கள் குறித்து மக்களிடையே முழு விழிப்புணர்வு தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். மனிதவள அமைச்சின் கீழ் எச்.ஆர்.டி கோர்ப், பெர்கேசோ, நியோஸ், டேலன்ட் கோர்ப், தொழில் திறன் மேம்பாட்டு நிதி நிர்வாகம் ஆகியவை உள்ளது.
இந்த இலாகாவின் கீழ் பல திட்டங்கள் உள்ளன. இத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்குச் சென்றடைய வேண்டும். இதன் அடிப்படையில் தான் ஜெலாஜா மனிதவள அமைச்சு பயணம் ‘JELAJA MADANI KSM’ எனும் நிகழ்வைத் தொடங்கியுள்ளது. இதன் முதல் நிகழ்வு நேற்று கிள்ளான் செந்தோசாவில் மிகப் பெரிய அளவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மக்கள் பெரிதும் நன்மை அடைந்தனர் என்று சிவகுமார் தெரிவித்தார்.
செந்தோசா சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், எச்.ஆர்.டி கோர்ப் நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ வீரா சாகுல் டாவூட், டேலாண்ட் கோர்ப் நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி மேத்தியூஸ் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பித்தனர். இதனிடையே செந்தோசா தமிழ்ப் பள்ளி மற்றும் ஆலயத்திற்குச் சிறப்பு வருகை புரிந்த மனிதவள அமைச்சர் சிவகுமாருக்குச் சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.