கோலாலம்பூர், பிப் 22 – தோட்டத் துறையில் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது தொடர்பில் மலேசியாவும் இந்தியாவும் புரிந்துணர்வு மகஜரில் கையெழுத்திட்டுள்ளதாக தோட்ட தொழில் மற்றும் மூலத்தொழில் அமைச்சர் சுரைடா கமாருடின் தெரிவித்தார்.
மலேசிய தோட்டத் துறையில் வேலை செய்வதற்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் அதிகமாக தேவைப்படுவதாக இந்திய வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் வி.முரளிதரனை சந்தித்தபோது சுரைடா கூறினார்.
தோட்ட த்துறையில் தொழிளாளர்களை வினியோகிப்பதற்கு நீண்ட கால ஏற்பாடுகள் குறித்து முரளிதரனுடன் தமது சந்திப்பு அமைந்ததாக அவர் தெரிவித்தார்.
விவசாய ஏற்றுமதியை அறிமுகப்படுத்தும் பொருட்டு இந்தியாவுக்கு நான்கு நாள் வருகையை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமையன்று சுரைடா இந்தியா சென்றடைந்தார்.
இவ்வாண்டு இந்தியாவுக்கான செம்பனை உற்பத்தியை மலேசியா அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மலேசிய செம்பனை எண்ணெய்க்கான தேவை அதிகரிக்கும் என்பதால் தோட்டத் துறையில் வேலை செய்வதற்காக 32,000 வெளிநாட்டு தொழிலாளர்களை மலேசியா கொண்டுவரும் என்றும் சுரைடா விவரித்தார்.