
கோலாலம்பூர், ஜன 1 – தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள விவகாரம் தொடர்பில் தற்போது மாப்பாவுக்கும் தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்திற்குமிடையே ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை அகற்றுவதற்கு மனித வள அமைச்சர் வி. சிவகுமார் உதவ வேண்டும். இது தொடர்பாக விரைவில் சிவக்குமாருடன் சந்திப்பு நடத்துவதற்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான தேதிக்காக காத்திருப்பதாக தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஜி.சங்கரன் தெரிவித்தார். அதே வேளையில் சம்பள பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு காண முடியாவிட்டால் இந்த விவகாரத்தை விரைவாக தொழிலியல் நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்வதற்கு மனித வள அமைச்சு அனுமதிக்க வேண்டும் என குவந்தானில் நடைபெற்ற தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் 23 ஆவது ஆண்டு பேராளர் மாநாட்டில் உரையாற்றியபோது சங்கரன் கேட்டுக் கொண்டார். இந்த கூட்டத்தில் தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர்
A. நவமுகுந்தன் மற்றும் தேசிய தோட்ட தொழிற்சங்கத்தின் மாநில தலைவர்கள் செயலாளர்கள், நிர்வாக உறுப்பினர்கள் என 150 பேர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் சங்கத்தில் நீண்ட காலம் சேவையாற்றிய 8 பேருக்கு தங்கப்பதக்கம் அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.