கோலாலம்பூர், பிப் 20- ஜோகூர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் , இரு முன்னாள் பிரதமர்களான துன் டாக்டர் மகாதீர் முஹமட்டும் , டத்தோ ஶ்ரீ நஜிப்பும் மீண்டும் ஒருவரை ஒருவர் சாடிக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
ஜோகூர் வாக்காளர்களுக்காக தாம் எழுதிக் கொண்டிருக்கும் புதிய கடிதத்தில், டத்தோ ஶ்ரீ நஜிப்பையும் அவரது தந்தையான நாட்டின் இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக் ஹுசேய்னையும், துன் மகாஹீர் ஒப்பீடு செய்துள்ளார்.
நஜீப் அவரது தந்தை போல் அல்ல. துன் ரசாக் மதிப்புமிக்க தேசியவாதியாவார். நஜீப்போ ஜோ லோவின் துணையுடன் நாட்டின் பல கோடி சொத்துக்களை சூறையாடியுள்ளார் என மகாதீர் கூறியுள்ளார்.
இவ்வேளையில், தமக்கும் நஜிப்புக்கும் எந்தவொரு தனிப்பட்ட விரோதமோ இருந்ததில்லை; ஆனால், 1MDB – யில் நஜிப்பின் ஈடுபாட்டிற்குப் பின்னரே அவரை குறை கூறத் தொடங்கியதாகவும், அதற்கு முன்பு, துன் அப்துல்லா பிரதமராக இருந்தபோது, நஜீப் துணைப் பிரதமராக பதவி வகிக்க தாம் ஆதரவாக இருந்ததை மகாதீர் சுட்டிக் காட்டினார்.
இதனிடையே, தம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தும், அதிகாரத்தில் இருந்தால் , நீதிமன்ற முடிவிலிருந்து தாம் தப்பித்து விடலாமென கருதி நஜீப் , அரசியல் பலம் தேட முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.
தம்மை தாக்கி ஜோகூர் மக்களுக்கு கடிதம் எழுதும் அளவிற்கு மகாதீரின் உடல் நலம் தேறி இருக்க வேண்டுமென கடந்த பிப்ரவரி 15 –ஆம் தேதி நஜிப் தமது முகநூலில் பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலாக இன்று துன் மகாதீரின் கடிதம் அமைந்துள்ளது.
முன்னதாக, கடந்த பிப்ரவரி 15- ஆம் தேதி எழுதிய கடிதத்தில் , மார்ச் 12 தேர்தல் நடைபெறுவதற்கு நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்கியிருக்கும் அம்னோ தரப்பே காரணமென பெஜுவாங் கட்சியின் தலைவரான மகாதீர் குறிப்பிட்டிருந்தார்.