
கோலாலம்பூர். செப் 15 – அனைத்துலக பெட்ரோலிய முதலீட்டு நிறுவனத்திற்கு (ஐபிஐசி) 6.6 பில்லியன் ரிங்கிட் செலுத்தியதாக நஜிப் ரசாக் மற்றும் இர்வான் செரிகார் அப்துல்லா மீதான நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு மீதான வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜூன் 4 முதல் ஜூலை 31 வரை 30 நாட்களுக்கு நடைபெறும். இந்த வழக்கை அடுத்த ஆண்டு விசாரிக்க வேண்டும் என்று அரசாங்க தரப்பு வழக்கறிஞரான சைபுதீன் ஹாஷிம் முஸைமி இன்று உயர் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார். அவரது அந்த ஆலோசனையை நஜீப் மற்றும் இர்வான் வழக்கறிஞர்களான ஷஃபீ அப்துல்லாவும் குமரேந்திரனும் ஏற்றுக்கொண்டனர்.
முன்னதாக, நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுக்களை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக முன்னாள் கருவூலச் செயலாளர் இர்வான் சுமந்து கொண்டிருப்பதால் வழக்கை ஜனவரியில் விசாரிக்க வேண்டும் என்று குமரேந்திரன் பரிந்துரைத்திருந்தார். அவர் நாட்டை விட்டு வெளியேற முடியாது மற்றும் எந்தவொரு தொழில் முன்னேற்றத்தையும் (குற்றச்சாட்டுகள் காரணமாக) தொடர முடியாத சூழ்நிலையில் இருப்பதையும் குமரேந்திரன் சுட்டிக்காட்டினார்.