கோலாலம்பூர், பிப் 11 – நாட்டின் இரண்டு முன்னாள் பிரதமர்களான நஜீப் மற்றும் முஹிடின் யாசின் ஆகியோருக்கிடையிலான மோதல் தொடர்ந்து மோசமடைகிறது. ஜோகூர் தேர்தலை முன்னிட்டு அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றஞ்சாட்டியும், குறைகூறியும் வருகின்றனர். கடந்த சில நாட்களாக அவர்களுக்கிடையிலான வெறுப்புணர்வும் தடித்த வார்த்தைகளும் அதிகமாக உள்ளது. 1 எம்.டி.எம் ஊழலை மோசமாக்கியதால் அம்னோ மீது மக்கள் வெறுப்படையும் அளவுக்கு அக்கட்சிக்கு நஜீப் துரோகம் செய்துவிட்டதாக முஹிடின் குற்றஞ்சாட்டியிருந்தார். அதோடு 1 எம்.டி.பி விவகாரத்திற்கு வெளிப்படையான விசாரணை தேவை என கோரிக்கை விடுத்ததற்காக 2015ஆம் ஆண்டு துணைப்பிரதமர் பதவியிலிருந்து தம்மை நஜீப் நீக்கியதாகவும் முஹிடின் தெரிவித்தார்.
1 MDB ஒரு விவகாரம் சர்ச்சையாக உருவெடுப்பதற்கு முன்னதாகவே 2014ஆம் ஆண்டு டாக்டர் மகாதீர் மற்றும் முக்ரிஸ்சுடன் உடந்தையாக முஹிடின் இருந்துவந்தார் என நஜீப் தமது முகநூலில் இன்று பதிவிட்டுள்ளார். அதோடு பாக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை கவிழ்ப்பதற்கு ஷரோட்டோன் நடவடிக்கையை முன்னெடுத்தன் மூலம் மகாதீரின் முதுகில் குத்திவிட்டுத்தான் முஹிடின் நாட்டின் 8ஆவது பிரதமரானதாகவும் நஜீப் தெரிவித்தார்.