
கோலாலம்பூர், மார்ச் 14 – முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக், அவரது துணைவியார் டத்தின் ஶ்ரீ ரொஸ்மா மன்சோர் இருவரின் ஊழல் வழக்கு தொடர்பான தீர்ப்பு, முன் கூட்டியே கசிந்தது குறித்த விவகாரம் இன்னும் விசாரிக்கப்படுகிறது.
அதன் தொடர்பான விசாரணை அறிக்கையை போலீஸ் கடந்தாண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி தேசிய சட்டத் துறை அலுவலகத்திடம் வழங்கியதாக, சட்ட விவகாரங்களுக்கு பொறுப்பேற்றுள்ள பிரதமர் துறை அமைச்சர் அசாலினா ஒத்மான் சாயிட் (Azalina Othman Said )தெரிவித்தார்.
அதையடுத்து, நிபுணத்துவ தரப்பின் இரண்டாவது கருத்துக்காக, MCMC – மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் பறிமுதல் செய்த மடிக்கணினிகளையும், கைபேசி தரவுகளையும் CyberSecurity Malaysia நிறுவனத்திடம் ஒப்படைக்கும்படி தேசிய சட்டத் துறை அலுவலகம் கேட்டுக் கொண்டது.
அதன் பின்னர் , அந்த விவகாரத்தை விசாரிக்கும் அதிகாரிக்கும் CyberSecurity நிறுவனத்துக்கும் இடையில் பிப்ரவரி 10-ஆம் தேதி சந்திப்புக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
நஜீப், ரொஸ்மா இருவரின் நீதிமன்ற வழக்குகள் தொடர்பான தீர்ப்பு , முன்கூட்டியே , இணைய பதிவேட்டாளர் Raja Petra Kamarudin வழிநடத்தும் Malaysia Today அகப்பக்கத்தில் கசிய செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.