கோலாலம்பூர், ஜனவரி-7 – டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தனது எஞ்சிய சிறைக்காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கும் கூடுதல் உத்தரவு இருந்திருப்பது உண்மையே என நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக இதுநாள் வரை அப்படியொன்று இல்லவே இல்லையென மூடி மறைக்கப்பட்டது ஏன் என, பெர்சாத்து கட்சியில் மலாய்க்காரர் அல்லாத உறுப்பினர்களுக்கான பெர்செக்குத்து பிரிவின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
ஓர் அரச உத்தரவு மூடி மறைக்கப்படுவது என்பது சாதாரண விஷயமல்ல; அரசாங்கம் மற்றும் ஆட்சியாளர்களின் வெளிப்படைத் தன்மை குறித்த நம்பகத்தன்மையையே கேள்வி எழுப்பும் அளவுக்குக் கடுமையானது.
எனவே இழந்த நம்பிக்கையை உடனடியாக மீட்டெடுக்க இவ்விஷயம் விரிவாகவும் ஆழமாகவும் விசாரிக்கப்பட வேண்டும்.
அரச உத்தரவை மூடி மறைத்தவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும்; நீதி நிலைநாட்டப்பட்டு மலாய் ஆட்சியாளர்களின் மாண்பு கட்டிக் காக்கப்பட வேண்டுமென சஞ்சீவன் கேட்டுக் கொண்டார்.
நஜீப்பை வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்கும் அப்போதையப் பேரரசரின் கூடுதல் உத்தரவு அடங்கிய கடிதத்தை, அவரின் வழக்கறிஞர் நேற்று புத்ராஜெயா மேமுறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து, அவ்வுத்தரவு குறித்து உயர் நீதிமன்றம் விசாரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.