
கோலாலம்பூர்., செப் 18 -1980களில் தமிழ்,மலையாளம், தெலுங்கு போன்ற திரைப்படங்களில் பிரபலமான நட்சத்திரமாக திகழ்ந்த நடிகர் மோகன் தமது சிறந்த நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்த நடிகராகவும் விளங்கினார். அதோடு அவரது திரைப்படங்களில் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்த பல சிறந்த பாடல்களும் இடம் பெற்றிருந்தன. . இளைய நிலா பொழிகிறது, ராஜ ராஜ சோழன், வா வெண்ணிலாவே உன்னைத் தனோ வானம் தேடுதே , நிலாவே வா, சங்கீத மேகம், ஊரு சனம் தூங்கிருச்சி, ஊத காற்றும் அடிச்சிருச்சி போன்ற பிரபலமான எண்ணற்ற பாடல்களை அவருக்காக பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி .பாலா பாடியிருந்தார்.
அவரது பாடல்களை மலேசிய ரசிகர்களுக்கு கொண்டுவரும் வகையில் கோலாலம்பூரிலுள்ள விஸ்மா எம்.சி.ஏ வில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் பாடகர்களான சாய் சரண், நிக்கல் மெத்தியு, ரம்யா துரைசாமி, லெட்சுமி ஆகியோர் பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். இந்த நிகழ்ச்சியை காண சுமார் 1,500 ரசிகர்கள் திரண்டனர். சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சி ரசிகர்களின் காதுகளுக்கு இனிய கீதமாக அமைந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்களுடன் சுமார் இரண்டு மணி நேரம் சளைக்காமல் நடிகர் மோகன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். டி.எச்,ஆர் மாறன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்வில் தமது புதிய படமான Haraan பாடலையும் மோகன் வெளியீடு செய்தார்.