
இந்தியா, நவ 18 – AI அதாவது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகை கஜோல் உடை மாற்றுவதுபோல போலியான deepfake காணொளி ஒன்று வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு அதற்கு பலரும் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.
உண்மையிலேயே அந்த காணொளியில் உள்ள பெண் TikTok பிரபலம் ‘rosiebreenx’ எனும் மாடல். மலிவு விலையில் கோடை ஆடைகள் பற்றி ஜூன் மாதம் 5ஆம் தேதி ரோஸி பிரீன் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ரோஸி பிரீன் வெளியிட்ட அந்த காணொளியில் அவரது முகத்திற்கு பதிலாக கஜோலின் முகத்தை வைத்து போலியாக காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், சினிமா நடிகை ராஷ்மிகா மந்தானா மற்றும் கத்ரினா கைஃப் ஆகியோரின் போலி காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியதோடு AI தொழில்நுட்பம், deepfake தொழில்நுட்பம், போலி காணொளிகள் தொடர்பான கவலைகளை அதிகரித்துள்ளன.
அதனைத் தொடர்ந்து, போலி காணொளி தயாரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் இந்தியாவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டுப் பிரதமர் மோடியும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் காணொளிகள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.