
இந்தியா, நவம்பர் 7 – நடிகை ரஷ்மிகா மந்தனாவின், முகம் சுளிக்க வைக்கும் “டீப்பேக்” வீடியோவுக்கு, நடிகர் அமிதாப் பச்சன் உட்பட திரை பிரபலங்கள் பலர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னியாக வலம் வரும் ரஷ்மிகா மந்தனா சமீபத்தில், நடிகர் அமிதாப்பச்சன் மகளாக “குட் பை” எனும் பாலிவுட் படத்தில் அறிமுகமாகி ஏராளமான இரசிகர்களை கவர்ந்தார்.
“கீதா கோவிந்தம்” படம் மூலம் இளைய தலைமுறையினரின் உள்ளம் கவர்ந்த நடிகை ரஷ்மிகா, “சுல்தான்” திரைப்படத்தில் நடிகர் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இளைய தளபதி விஜய்க்கு ஜோடியாக “வாரிசு” படத்தில் நடித்த அவர் புஷ்பா 2 படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஒரு முன்னணி நடிகையாக முன்னேறி வரும் ரஷ்மிகா மந்தனாவின் வளர்ச்சி பொறுக்காமல் அவரை அசிங்கப்படுத்தும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
“டீப்பேக்” தொழில்நுட்பம் மூலம் வேறு ஒரு நடிகையின் வீடியோவில் ரஷ்மிகாவின் முகத்தை பொருத்தி சமூக ஊடகங்களில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அந்த மோசமான வீடியோவிற்கு நடிகர் அமிதாப் பச்சன், தனது கண்டனத்தை X சமூக ஊடகம் மூலம் தெரிவித்துள்ளார். அது மனித உரிமையை மீறும் செயல். இலக்கவியல் ஆள்மாறாட்டம் மற்றும் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தும் கலாச்சாரம் தடுக்கப்பட வேண்டும் என அபிதாப் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வேளையில், தொழில்நுட்பம் எவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதை பார்க்க தமக்கு பயமாக இருப்பதாகவும், பலர் அதனால் பாதிக்கப்படுவதற்கு முன் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் ரஷ்மிகா கேட்டுக் கொண்டுள்ளார்.