நடுவரை தாக்கினார்; ஜோர்டான் காற்பந்து விளையாட்டாளர் மலேசியாவில் விளையாட தடை

கோலாலம்பூர், நவ 20 – நடுவரை தாக்கியதால் ஜோர்டானின் அனைத்துலக காற்பந்து விளையாட்டாளர் யாசான் அல்-ஆரப் மலேசியாவில் காற்பந்து விளையாடுவதற்கு ஆயுள் கால தடை விதிக்கப்பட்டுள்ளார். மலேசிய காற்பந்து சங்கத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இதனை தெரிவித்தது. கடந்த செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா விளையாட்டரங்கில் சிலாங்கூருக்கும் திரெங்கானுவுக்குமிடையே நடைபெற்ற மலேசிய கிண்ண காற்பந்து போட்டியின் இரண்டாவது கட்ட காலிறுதியாட்டத்தின் முடிவில் விரக்தியற்ற யாசான் அல்-ஆரப் நடுவரை தாக்கியதோடு அவர் மேல் எச்சில் துப்பியதைத் தொடர்ந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த சம்பவத்திற்குப் பின் அவரது உடன்பாட்டை இணக்கத்தின் பேரில் சிலாங்கூர் உடனடியாக நீக்கியது. மலேசிய காற்பந்து சங்கத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்கான 51ஆவது பிரிவை மீறியதன் தொடர்பில் அவருக்கு எதிராக இந்த தடை விதிக்கப்பட்டது.