
கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 29 – வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளில், விலகாமல் நம்முடன் தொடர்ந்து பயணம் செய்யும் நெருங்கிய நண்பர்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.
அப்படி நம்முடன் ஒட்டிக் கொண்டிருக்கும் நண்பருக்கு, பெரிய பரிசுகளை வழங்கி மகிழ்விப்பது ஒன்றும் புதிதல்ல.
அந்த வகையில், தனது நெருங்கிய நண்பருக்கு, அவரது திருமண அன்பளிப்பாக ஒரு லட்சம் ரிங்கிட் அடங்கிய பூங்கொத்தை கொடுத்து அசத்தியுள்ளார், மலேசிய இணைய பிரபலம் ஒருவர்.
அந்த வித்தியாசமான அன்பளிப்பு அடங்கிய காணொளியை, ஐசார் காலிட் எனும் அந்நபர் தனது டிக் டொக் கணக்கில் பதிவிட்டுள்ளதை அடுத்து வைரலாகியுள்ளது.
இம்மாதம் 26-ஆம் தேதி, நடைபெற்ற திருமண விழாவின் போது, ஐசார் தனது ஆடம்பர Lamborghini காரிலிருந்து அந்த மலர் கொத்தை எடுத்து கொடுக்கும் காட்சி அந்த காணொளியில் இடம் பெற்றுள்ளது.
ஐசாரின் அந்த பூங்கொத்தை பெற்றுக் கொண்ட அவரது நண்பரான முஹமட் நிக்கோலஸ் மகிழ்ச்சியில், கண்ணீர் மல்கி அழுகிறார்.
தனக்கு உறுதுணையாக தொழிலை கவனித்துக் கொள்வதோடு, நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் அந்த நண்பருக்கு நன்றி கடன் செலுத்தும் வகையில், தாம் அந்த பூங்கொத்தை பரிசளித்தாகவும் ஜசார் பதிவிட்டுள்ளார்.
இவ்வேளையில், அவ்விருவரின் அந்த அரிய நட்பு நிலைத்து நீடிக்க வேண்டுமென, இணைய பயனர்கள் பலர் வாழ்த்தி பாராட்டி வருகின்றனர்.