கோலாலம்பூர், பிப் 9 – மலேசிய இந்தியர்களின் நம்பிக்கை இயக்கம் ( Persatuan Harapan India Malaysia ) எனப்படும் அரசாங்க சார்பற்ற அமைப்பைச் சேர்ந்தவர்களால், நபர்கள் தாக்கப்பட்ட சில சம்பவங்கள் தொடர்பில் வைரலாகியிருக்கும் காணொளி குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுவதை போலீஸ் மறுத்திருக்கிறது.
4 நிமிடம் 59 வினாடிகள் கொண்ட சம்பந்தப்பட்ட காணொளியில் , 2020 -இல் சிலாங்கூர், பினாங்கு மாநிலங்களில் நிகழ்ந்த சில குற்றச் செயல் சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், அந்த காணொளியில் போலீஸ் தரப்பு குறித்து உண்மையற்ற கூற்றுகள் இடம்பெற்றுள்ளதாகவும் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வு துறையின் தலைவர் டத்தோ ஶ்ரீ அப்துல் ஜாலில் ஹாசான் ( Datuk Seri Abd Jalil Hassan ) தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட காணொளியில் குறிப்பிட்டப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், தவறிழைத்தவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அதையடுத்து, அந்த காணொளியைப் பகிரச் செய்து பொது மக்களிடையே தேவையற்ற பீதியை ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமென Datuk Seri Abd Jalil Hassan எச்சரித்தார்.