ஷா ஆலாம், அக்டோபர்-13,
இந்துக்களின் முக்கிய சமய விழாக்களில் ஒன்றான நவராத்திரியை 22 ஆண்டுகளாக வீட்டில் வைத்து வெகு சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கிறது சிலாங்கூர், ஷா ஆலாமில் பாரம்பரியத்தைக் கட்டிக் காக்கும் ஒரு குடும்பம்.
அவ்வகையில், மறைந்த நடிகர் ராமாராவின் மகள் ஷாந்தி ராமாராவ் வீட்டில் நவராத்திரியின் கடைசி பத்தாம் நாள் விழா இவ்வாண்டும் களைக் கட்டியது.
கோவிட் பெருந்தொற்றுக்கு முன்பு வரை நவராத்திரியின் பத்து நாட்களும் வீட்டில் கொலு வைத்துச் சிறப்பாகக் கொண்டாடி வந்த ஷாந்தி ராமாராவும் அவரின் கணவர் நந்தகுமாரும், வயது முதிர்வு காரணமாகத் தற்போது கடைசி பத்தாம் நாள் விழாவை மட்டும் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.
பிற்பகல் 3.30 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரை பல்வேறு நிகழ்வுகளுடன் ஒரு திருமணத்தையே நடத்தி முடிப்பது போன்று தடபுடலாக அந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம்முறை சுமார் 200 பேர் பங்கேற்றுச் சிறப்பித்த அந்நிகழ்வில் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட இசைக்கலைஞர்களின் கக்சேரியும், பஜனையும் முக்கிய அம்சமாக விளங்கியது.
வருகையாளர்களுக்கு அறுசுவை விருந்தோடு, புடவைத் துணிமணிகளையும் அத்தம்பதியர் எடுத்து வழங்கினர்.
குடும்பப் பாரம்பரியத்தைக் கட்டிக் காக்கும் அதே வேளை, துர்கை அன்னைக்காக விழா எடுத்து மகிழ்வது தங்களுக்கு ஆத்ம திருப்தியைக் கொடுப்பதாக ஷாந்தி ராமாராவ் சொன்னார்.