
கோலாலம்பூர், நவ 15 – தனது மகன் நவீன் கொலையில் இருந்து விடுவிக்கப்பட்ட 5 நபர்களை கைது செய்வதற்கான வாரண்ட் விண்ணப்பம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து மௌனம் காத்து வந்தால் நவம்பர் 18ஆம் தேதி சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக டி. நவீனின் தாயார் சாந்தி துரைராஜ் கூறியுள்ளார்.
நவீனை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரையும் அக்டோபர் 3ஆம் தேதியன்று பினாங்கு உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. அந்த ஐவரின் விடுதலை தொடர்பில் சட்டத்துறை தலைவர் அலுவலகம் அக்டோபர் 13ஆம் தேதி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. சமூக ஆர்வலர் அருண் துரைசாமி மற்றும் குடும்பத்தினர் மூலம் சாந்தியின் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர்கள், விடுவிக்கப்பட்ட ஐவரையும் கைது செய்யுமாறு நவம்பர் 8 ஆம் தேதி சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
எனினும் இதுவரை அந்த கடிதத்திற்கு சட்டத்துறை தலைவரின் அலுவலகத்திலிருந்து தமக்கு எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லையென சாந்தி கூறினார். உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்வதற்கு முன்னதாக அந்த ஐவரும் நாட்டிலிருந்து வெளியேறிவிடுவார்கள் என்றும் சாந்தி அச்சம் தெரிவித்துள்ளார்.
மூத்த குழந்தையை இழந்த ஒரு தாயாக, தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். என்னால் அமைதியாக இருக்க முடியாது AGC மேல்முறையீட்டு மற்றும் விசாரணைப் பிரிவு தலைவர் டுசுகி மொக்தாருக்கு எழுதிய கடிதத்தில் சாந்தி தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து தமக்கோ அல்லது தமது வழக்கறிஞர்களுக்கோ எதுவும் தெரிவிக்கப்படாவிட்டால் நவம்பர் 18ஆம் தேதி கோலாலம்பூரில் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லையென சாந்தி சுட்டிக்காட்டினார்.