
நியூ ஜெர்சி, செப்டம்பர் 26 – இந்தியாவிற்கு வெளியே, உலகின் மிகப் பெரிய இந்து கோவில், எங்கு கட்டப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
அமெரிக்கா, நியூ ஜெர்சியிலுள்ள, ராபின்ஸ்வில்லி (Robbinsville) நகரில் தான் அந்த பிரமாண்டமான சுவாமிநாராயணன் திருக்கோவில் வீற்றிருக்கிறது.
சுமார் 183 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் அந்த திருக்கோவில், அடுத்த மாதம் எட்டாம் தேதி அதிகாரப்பூர்வ திறப்புவிழா காண்கிறது.
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்துக்கு தெற்கே 90 கிலோமீட்டர் தொலைவில் அல்லது வாஷிங்டன் டிசிக்கு வடக்கே சுமார் 289 கிலோமீட்டர் தூரத்தில் வீற்றிருக்கும் அந்த திருக்கோவிலை, அமெரிக்கா முழுவதும் இருந்து திரண்ட சுமார் 12 ஆயிரத்து 500 தன்னார்வத் தொண்டர்கள் கட்டி முடிக்க, 12 ஆண்டுகள் ஆனதாக கூறப்படுகிறது.
கம்போடியாவிலுள்ள, 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, இந்து கோவிலான அங்கோர் வாட்க்கு (Angkor Wat) அடுத்த படியாக, உலகில் கட்டப்பட்டுள்ள இரண்டாவது பெரிய கோவிலாக அது கருதப்படுகிறது.
தற்சமயம், அமெரிக்கா முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான இந்துக்களும், பிற மதத்தவரும் அந்த சுவாமிநாராயண் திருக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். எனினும், அக்டோபர் எட்டாம் தேதி அது அதிகாரப்பூர்வ திறப்பு விழா காணும் வேளை ; அக்டோபர் 18-ஆம் தேதி தொடங்கி அக்கோவில் மீண்டும் பொதுமக்களுக்கு திறக்கப்படும்.