
கோலாலம்பூர், நவ 1 – 15 -ஆவது பொதுத் தேர்தல் மற்றும் சபாவின் புகாயா சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் எதிர்வரும் சனிக்கிழமை நவம்பர் 5 -ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி காலை 10 மணிவரை நடைபெறும். 222 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரியிடம் குறிப்பிட்ட நேரத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ Ikmalrudin Ishak தெரிவித்தார். வேட்பாளர்களின் வேட்பு மனு பாரத்தில் ஒருவர் முன்மொழிந்து மற்றொருவர் வழிமொழிய வேண்டும். வேட்பு மனுத்தாக்கல் சுமுகமாக நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் நிர்வாகி அலுவலகம் அல்லது மாநில தேர்தல் அலுவலகத்திற்று சென்று தங்களது வேட்பு மனு பாரங்களை முன்கூட்டியே சரிபார்த்துக்கொள்ளலாம் என Ikmalrudin தெரிவித்தார்.
வேட்பாளர்கள் முன்கூட்டியே வைப்பு தொகையை செலுத்தி அதற்கான ரசீதுகளை பெற்றுக்கொண்டு வேட்பு மனு தாக்கலின்போது அந்த ரசீதுகளை கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார். வேட்பு மனுத் தாக்கலின்போது வேட்பாளர், முன்மொழிபவர் மற்றும் வழிமொழிபவர் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும் மையத்திற்குள் செல்லமுடியும். வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும் இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் இருப்பதற்கு அனுமதிக்கப்படுவர்.