
மலேசியரான நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை தடுப்பதற்கு உள்நாடு மற்றும் அனைத்துலக நிலையில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இன்று விடியற்காலையில் சிங்கப்பூரில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதனை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.
12 ஆண்டுகளுக்கு முன் 43 கிராம் எடை ஹெரோய்னை சிங்கப்பூருக்குள் கடத்தி வந்ததன் தொடர்பில் நாகேந்திரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வேளையில், நாகேந்திரனின் இறுதிச் சடங்கு ஈப்போவில் நடைபெறும் என அவரது சகோதரர் நவீன் குமார் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, Changi சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த நாகேந்திரன், சிந்திக்கும் திறன் குறைபாடு கொண்டவர் என அவரது வழக்கறிஞர்கள் கூறியிருந்தனர். எனினும் அவருக்கு மரண தண்டனையை தொடர்ந்து நிலைநிறுத்திய சிங்கப்பூரின் முடிவிற்கு பலரும் ஆட்சேபம் தெரிவித்திருந்தனர்.
IQ அறிவுத் திறன் சோதனையில் நாகேந்திரன் 69 புள்ளிகளையே பெற்றிருந்தார். அந்த புள்ளிகள் அடிப்படையில் ஒருவரை உடற் பேறு குறைந்தவர் என அறிவிக்க முடியும். ஆதலால், நாகேந்திரன் அந்த குற்றச் செயலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டிருந்தனர்.
தனது மகனின் தண்டனையை நிறுத்துவதற்காக, அவரது தாயார் நேற்று இறுதி முயற்சியாக நீதிமன்றத்தில் செய்திருந்த மேல் முறையீட்டு மனுவும் நிராகரிக்கப்பட்டது.
நீதிமன்ற முடிவை தாமதப்படுத்தும் முயற்சியாக, திட்டமிட்டு அந்த முறையீட்டு மனுவை செய்திருப்பதாக கூறி , தாயார் பாஞ்சாலையின் கோரிக்கையை நீதிபதி Andrew Phang தள்ளுபடி செய்தார்.
இதற்கு முன்பு, பேரரசர் Al-Sultan Abdullah- வும், பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பும் , நாகேந்திரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க கோரி, சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பல தரப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதுவும் கைகூடாத நிலையில், நாகேந்திரனின் 10 ஆண்டு கால போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது.