
ஜோர்ஜ் டவுன், ஏப் 14 -நாசி கண்டார் கடையின் நிர்வாகி என நம்பப்படும் மியன்மார் நாட்டை சேர்ந்த ஆடவர் ஒருவர் மார்ச் 7 ஆம் தேதி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதில் சப்பந்தப்பட்ட ஆறு சந்தேக நபர்களை தேடும் நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அந்த ஆடவர் தாசேக் கெலுகோர், தாமான் செபாடு ஜெயாவில் உள்ள நாசி கண்டார் உணவகத்தை நிர்வகித்து வந்தார். இரண்டு வெளிநாட்டு ஆண்கள் மற்றும் நான்கு மலேசியர்கள் உட்பட பல சந்தேக நபர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமட் தெரிவித்தார்.
இந்த சந்தேக நபர்கள் பினாங்கிற்கு வெளியே வசித்து வந்தனர். சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய புக்கிட் அமான் கூட்டரசு போலீஸ் உதவியுடன் முயற்சிகள் நடந்து வருகின்றன என்று அவர் கூறினார்.
வட செபெராங் பிறை மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற பினாங்கு போலீஸ் தலைமையகத்தின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் கலந்துகொண்டபோது ஹம்சா செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
அந்த ஆடவர் கொலை தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, 30 மற்றும் 40 வயதுடைய வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர்வாசிகள் என எட்டு நபர்களை இதற்கு முன் போலீசார் கைது செய்தனர்.