
கோலாலம்பூர், செப்டம்பர் 13 – உணவு பாதுகாப்பு மீதான மகஜரை ஒப்படைக்க, நேற்று நாடாளுமன்றத்திற்குப் பேரணியாக சென்ற 20 பேருக்கு எதிராக, டாங் வாங்கி போலீஸ் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.
சம்பந்தப்பட்ட மகஜரைத், துகு நெகாராவில் ஒப்படைக்க இரு தரப்பினரும் இணக்கம் கண்டிருந்தனர்.
எனினும், பின்னர் அவர்கள் பேரணியாக நாடாளுமன்றத்திற்குச் சென்றது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
பணியில் இருந்த போலீசார், பேரணியாக நாடாளுமன்றத்திற்குச் சென்றவர்களைத் தடுத்த போதும், அவர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளதாக, டாங் வாங்கி போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் நோர் டெல்ஹான் யாஹ்யா தெரிவித்தார்.
அதனால், குற்றவியல் சட்டத்தின் 186-வது பிரிவின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ள வேளை ; சம்பந்தப்பட்டவர்கள் வாக்குமூலம் அளிக்க விரைவில் அழைக்கப்படுவார்கள்.
விசாரணை முழுமைப் பெற்றதும் அது அரசாங்க தரப்பு வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்படுமென நோர் டெல்ஹான் தெரிவித்தார்.