
கோலாலம்பூர், செப்டம்பர் 13 – நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுகாதார பரிசோதனை செய்துக் கொள்வது, கட்டாயமாக்கப்பட வேண்டுமென, மக்களவைத் தலைவர் டான் ஸ்ரீ ஜொஹாரி அப்துல் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் உடல்நிலை சீராக இருப்பதை உறுதிச் செய்ய, அவர்களுக்கு வழக்கமான சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென, சுகாதார அமைச்சுக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் பரிந்துரை தொடர்பில், ஜொஹாரி அவ்வாறு கருத்துரைத்தார்.
நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியிலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடல் நிலை குறித்து தாம் மிகுந்த அக்கறைக் கொண்டுள்ளதாக ஜொஹாரி குறிப்பிட்டார்.
அதனால், அவர்கள் கட்டாயம் சுகாதார பரிசோதனை செய்துக் கொள்ளும் கடிதங்கள் நேற்றைய நாடாளுமன்ற கூட்டத்தின் போது வழங்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
அதோடு, அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் அந்த மருத்துவப் பரிசோதனை முடிவுகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு விட வேண்டும் என்றாரவர்.
கடந்த 15 ஆண்டுகளில், உடல்நிலை காரணமாக சுமார் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரிந்ததை தாம் கண்கூடாக காண நேர்ந்ததாகவும், அதனால் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் ஜொஹாரி கேட்டுக் கொண்டார்.