இஸ்கண்டார் புத்ரி, மே 13 – ஜோகூரிலுள்ள இரு CIQ – சுங்க, குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தும் வளாகங்களுக்கு தாம் தொடர்ந்து திடீர் வருகை மேற்கொள்ளவுள்ளதாக, மாநில மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபீஸ் காசி கூறியுள்ளார்.
அவ்விரு CIQ வளாகங்களிலும் உள்ள பிரச்சனைகளுக்கு முழுமையாக தீர்வுக் காணப்படும் வரை தமது அந்த அதிரடி நடவடிக்கை தொடருமென, ஓன் ஹபீஸ் சூளுரைத்துள்ளார்.
நாட்டின் முக்கிய நுழைவாயிலுக்கு நான் நேரடியாக வருகை புரிவதை, பலர் விரும்பவில்லை என்பது எனக்கு நன்கு தெரியும்.
எனது அந்த திடீர் பயணங்கள், அவர்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்துகிறது.
எனினும், அங்கு காணப்படும் பிரச்சனைகளுக்கு முழுமையாக தீர்வுக் காணப்படும் வரையில், அந்த திடீர் வருகையை தாம் ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை என ஓன் ஹபீஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அதே சமயம், ஜோகூர் மாநிலத்தின் புதிய குடிநுழைவுத் துறை தலைமைத்துவத்தின் வாயிலாக, தினமும் அந்த நுழைவாயில் வழியாக வேலைக்கு சென்று திரும்பி, வாழ்க்கையை நடத்தப் போராடும், இரண்டு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு சிறந்ததொரு தீர்வை ஏற்படுத்த முடியும் என தாம் நம்புவதாகவும் ஓன் ஹபீஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஜோகூர் சட்டமன்ற கூட்டத் தொடரின் போது, அம்மாநிலத்திலுள்ள எல்லை நுழைவாயில்களில் போக்குவரத்தை எளிதாக்க மாநில அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முன் வைக்கப்பட்ட கேள்விக்கு, ஓன் ஹபீஸ் அவ்வாறு பதிலளித்தார்.