சுங்கை சிப்புட், அக்டோபர்-4 – நாட்டின் 530-வது தமிழ்ப்பள்ளியாக பேராக், சுங்கை சிப்புட்டில் இயங்கி வரும் ஹீவூட் (Heawood) தமிழ்ப்பள்ளிக்கு, ம.இ.கா முன்னாள் தேசியத் தலைவர் மறைந்த துன் எஸ்.சாமிவேலுவின் பெயர் சூட்டப்பட வேண்டும்.
அதுவே அப்பகுதி வாழ் மக்களின் விருப்பம் என, சின்னராசு வீரப்பன் தெரிவித்துள்ளார்.
இந்தியச் சமுதாயத்தின் ஒப்பற்றத் தலைவராகவும், நாடே போற்றிய அமைச்சர் பெருமகனாகவும் வலம் வந்தவர் துன் சாமிவேலு.
அதோடு, சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக 34 ஆண்டுகள் சேவையாற்றியவர் என்ற வகையில், துன் சாமிவேலுவின் பெயரை அப்பள்ளிக்குச் சூட்டுவதே பொருத்தமாக இருக்குமென பிரதமருக்கும் ஒற்றுமை அரசாங்கத்திற்கும் வைத்துள்ள கோரிக்கையில் சின்னராசு தெரிவித்தார்.
அதுவே பள்ளிக்கும் பெருமை, அன்னாருக்கும் நாம் செலுத்தும் கௌரவம் என்றாரவர்.
பல்வேறு சவால்களை கடந்து இன்று கம்பீரமாகக் காட்சியளிக்கும் ஹீவூட் தமிழ்ப்பள்ளிக்கு அடித்தளமிட்டதே ம.இ.கா-வும் அதன் நடப்பு தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனும் தான் என்பதையும் சின்னராசு சுட்டிக் காட்டினார்.
2008 பொதுத் தேர்தலின்போது இழந்த அத்தொகுதியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற இலட்சியத்தில் முழுமூச்சுடன் பாடுபட்ட அந்த நேரத்தில், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு புதிய தமிழ்ப் பள்ளியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் எடுத்த முயற்சிக்கு துணை நின்றவர் அன்றைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்.
5.9 ஏக்கர் நிலப்பரப்பில் 11.1மில்லியன் ரிங்கிட் கட்டுமானத்திற்கு ஒப்புதல் அளித்த தேசிய முன்னணி அரசு சார்பில், முதற்கட்டமாக 3.3மில்லியன் ரிங்கிட்டையும் ஒதுக்கீடு செய்ததன் அடிப்படையில் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்த நிலையில், 2018 ஏப்ரலில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தால், இந்தப் பள்ளிக்கான கட்டுமானம் நிலைகுத்தி நின்றது.
இந்த நிலையில், பலகட்ட முன்னெடுப்பிற்குப்பின், 2020-ஆம் ஆண்டில், இந்தப் பள்ளியின் கட்டுமானம் தொடர முடிவெடுக்கப்பட்ட நிலையில், 2மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கப்பட்டு புதிய ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன.
கடந்த மார்ச் மாதம் செயல்படத் தொடங்கிய ஹீவூட் தமிழ்ப்பள்ளியை, வரும் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.
தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் பிரதமராக இருந்த போது அறிவிக்கப்பட்ட 6 புதியத் தமிழ்ப்பள்ளிகளில், இறுதியாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள பள்ளியாக இந்த சுங்கை சிப்புட் ஈவூட் தமிழ்ப்பள்ளி திகழ்கிறது.