
ஈப்போ., ஜன 23 – சில முக்கிய துறைகளில் வேலை செய்வதற்கு நாட்டிற்குள் வருவதற்காக தொடக்க கட்டமாக 5 லட்சம் அந்நிய தொழிலாளர்கள் தயாராய் உள்ளதாக மனிதவள அமைச்சர் வி.சிவகுமார் தெரிவித்திருக்கிறார். கட்டுமானம், தோட்டத் தொழில் துறைகள் முக்கியமாக இதில் இடம் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.
பல முதலாளிகள் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்நோக்குவது குறித்து தமது கவனத்திற்கு கொண்டு வந்திருப்பதையும் சிவக்குமார் சுட்டிக்காட்டினார். வெளிநாட்டு தொழிலாளர்களின் வரவினால் உள்நாட்டு தொழிலாளர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லையென அவர் கூறினார்.
கடுமையாக தொழிலாளர்கள் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள தொழிலல்துறை மற்றும் உள்நாட்டு தொழிலாளர்கள் ஆர்வம் காட்டாத தொழில் துறைகளில் மட்டுமே வெளிநாட்டு தொழிலாளர்களை தருவிப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜெலப்பாங்கில் அருள்மிகு மூகாம்பிகை ஆலய வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் தெரிவித்தார். அந்நிய தொழிலார்கள் குறித்த விண்ணப்பங்கள் மூன்றே நாட்களில் பரிசீலிக்கப்படுவதற்கு அரசு முன்வந்துள்ளதால் இது தொடர்பான நிர்வாக தாமதம் ஏற்படும் சாத்தியம் இல்லையென்றும் அவர் கூறினார். அதோடு சிரமத்தை தவிர்ப்பதற்காக விண்ணப்பங்கள் செய்வதற்கு எளிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.