புத்ராஜெயா, ஜனவரி-11, சீன சுற்றுப்பயணிகள் கடுமையான பரிசோதனைகள் இன்றி நாட்டுக்குள் நுழைவதாக சமூக ஊடகங்களில் எழுந்துள்ள குற்றச்சாட்டை, குடிநுழைவுத் துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அவை அடிப்படையற்றவை மட்டுமல்ல, துறையின் நற்பெயருக்கே களங்கம் விளைவிக்கக் கூடியவை என, அதன் தலைமை இயக்குநர் Zakaria Shaaban கூறினார்.
உண்மையில், KLIA 1 மற்றும் KLIA 2 முனையங்களில் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்க, சீன சுற்றுப் பயணிகள் உட்பட 63 நாடுகளைச் சேர்ந்தவர்கள் autogate வசதியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.
Autogate வழியாக நுழைவதால் பாதுகாப்பு அம்சத்தில் சமசரம் செய்துகொள்வதாக அர்த்தமாகாது.
அவர்களும் அனைத்துப் பரிசோதனைகளையும் தாண்டித்தான் வரவேண்டும் என Zakaria சொன்னார்.
சுற்றுப்பயணிகளின் கடப்பிதழ்களிலிருந்து பெறப்படும் தரவுகளும், நுழைவுக் குறித்த தகவல்களும் biometrics எனப்படும் கைவிரல் ரேகையுடன் ஒத்துப்போகின்றனவா என சரிபார்க்கப்படும்.
அதே சமயம், autogate வழியாக நுழைபவர்கள் கருப்புப் பட்டியலில் இல்லாதவர்களாக இருக்க வேண்டும்; வந்திறங்கியதும் மலேசிய இலக்கவியல் அட்டையைப் பூர்த்திச் செய்திருக்கவும் வேண்டுமென்றார் அவர்.
சீன சுற்றுப்பயணிகளின் வருகை அதிகரித்து வருவது குறித்த கவலையும் தேவையற்றது.
காரணம், சீன பிரஜைகளுக்கான விசா விலக்குச் சலுகை 2026 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதை அவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.
2023-ல் 1.6 மில்லியன் பேராக இருந்த சீன சுற்றுப்பயணிக பின் எண்ணிக்கை கடந்தாண்டு 3.9 மில்லியன் பேராக உயர்ந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.