
கோலாலம்பூர், ஆக 31- மலேசியாவை ஆழமாக நேசித்து பல்வேறு இனங்களுக்கிடையே தொடர்ந்து இணைந்து பணியாற்றுவதன் மூலம் ஒற்றுமையுடன் நாட்டின் அமைதி மற்றும சுதந்திரத்தை தற்காக்க முடியும் என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார். மலேசியாவை மேம்படுத்துவதற்கும் இறையாண்மையை பாதுகாப்பதற்கும் இதுவே முக்கிய முயற்சிகளாக இருக்கும் என இன்று நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டு நேற்றிரவு தொலைக்காட்சி மூலம் ஆற்றிய உரையில் இஸ்மாயில் சப்ரி வலியுறுத்தினார்.
நாம் அனைவரும் ஒரே குடும்பம், Keluarga Malaysia பாரம்பரியத்திற்கு ஏற்ப சகோதரத்துவத்தையும் உறவுகளையும் பேணவேண்டும். சமூக உணர்வோடு சமூகம் பாதுகாக்கப்பட வேண்டும். நாடு மற்றும் இனங்களின் ஒற்றுமை மிகவும் முக்கியம் என்பதையும் பிரதமர் தெரிவித்தார். நாட்டின் சுதந்திரம் குறித்த வரலாறுகளை நினைவுகூர்ந்த அவர், சுதந்திரம் திடீரென ஒரே நாளில் நமக்கு கிடைத்துவிடவில்லை. அதற்கு பின்னால் பலரது தியாகம், இரத்தம் மற்றும் கண்ணீர் சிந்தப்பட்டுள்ளதையும் இஸ்மாயில் சப்ரி சுட்டிக்காட்டினார்.