
கோலாலம்பூர், நவம்பர் 1 – இம்மாதம் 12-ஆம் தேதி, நாட்டிலுள்ள இந்துக்கள் தீபத் திருநாளை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அதனை முன்னிட்டு, தீபத் திருநாளுக்கு முன், STR எனப்படும் நான்காம் கட்ட ரஹ்மா உதவித் தொகையை வழங்குவது குறித்து, நிதியமைச்சு பரிசீலிக்க வேண்டுமென, பிரதமரும், நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை, கெஅடிலான் கட்சியின், குவாலா சிலாங்கூர் கிளையின், துணை தலைமை செயலாளர் தீபன் சுப்ரமணியம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தீபாவளி கொண்டாட்டத்திற்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், உண்மையில் பலர் இன்னும் போதுமான பணம் இன்றி முன்னேற்பாடுகளை கூட மேற்கொள்ளாமல் இருக்கின்றனர்.
ரஹ்மா உதவித் தொகை அவர்களின் நிதிச் சுமையை குறைக்கும் என்பதோடு, பண்டிகை குதூகலத்திலிருந்து யாரும் விடுபட்டு விடாமல் இருப்பதையும் உறுதிச் செய்யும்.
அதனால், தமது கோரிக்கையை, பிரதமர் பரிசீலிப்பதோடு, விரைவில் சிறப்பு அறிவிப்பு ஒன்றையும் வெளியிடுவார் என தாம் நம்புவதாக, தீபன் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.
அதே சமயம், இன்று தொடங்கி அரசாங்கம் மீட்டுக் கொண்டிருக்கும் கோழி மற்றும் முட்டைக்கான உதவித் தொகை, சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்கச் செய்யும் எனும் பதற்றமும் மேலோங்கியுள்ளது.
அதனை கட்டுப்படுத்த, விழாக்கால விலைக்கட்டுப்பாட்டு இயக்கத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டுமெனவும், ஆங்காங்கே ரஹ்மா சந்தைகளை ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் தீபன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே சமயம், நாட்டில் கொண்டாடப்படும் இதர பண்டிகைகளை போல, தீபாவளியை முன்னிட்டு, ஒரு நாள் கூடுதல் பொது விடுமுறையையும் அரசாங்கம் அறிவிக்க வேண்டுமெனவும், தீபன் கோரிக்கையை நான் வைத்துள்ளார்.