கோலாலம்பூர், ஆகஸ்ட்-27 – தமது உடலில் இந்திய ரத்தம் ஓடுகிறது என்பதில் தமக்கு அவமானம் எதுவுமில்லை; ஆனால் அதற்காக தாம் மலாய்க்காரர் அல்ல என்றாகி விடாது என துன் டாக்டர் மகாதீர் மொஹமட் கூறியுள்ளார்.
துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடிக்கு எதிராக தாம் தொடுத்துள்ள அவதூறு வழக்கு, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று குறுக்கு விசாரணைக்கு வந்த போது, மகாதீர் அவ்வாறு சொன்னார்.
2017-ஆம் ஆண்டு கிளானா ஜெயாவில் ஆற்றிய உரையின் போது சாஹிட், தமக்கெதிராக அந்த அவதூறு கூற்றை வெளியிட்டதாக் கூறி, மகாதீர் வழக்குத் தொடுத்துள்ளார்.
சாஹிட் கூறியது போல் நான் எந்த காலத்திலும் ‘மகாதீர் தகப்பனார் பெயர் இஸ்கண்டார் குட்டி’ என்ற பெயரைப் பயன்படுத்தியதே இல்லை.
முதலில், அது என் பெயரே அல்ல; என் பெயர் ‘மகாதீர் மொஹமட்’ மட்டுமே. அப்படியிருக்க இஸ்கண்டார் குட்டி என்ற பெயரில் எனக்கு எப்படி அடையாள அட்டை இருந்திருக்கும் என மகாதீர் கேள்வி எழுப்பினார்.
தென்னிந்திய மாநிலம் கேரளா தான் எனது பூர்வீகம்; ஆனால் அங்கிருந்து வந்தது எனது தந்தையா அல்லது தாத்தாவா என்பதை குடும்பத்திடம் நான் கேட்டதே இல்லை என்றார் அவர்.
எனக்குத் தெரிந்த வகையில், என் தந்தையார் மலேசியாவில் பிறந்த மலாய்க்காரர் என 99 வயது மகாதீர் குறுக்கு விசாரணையின் போது சொன்னார்.