கோலாலம்பூர், மார்ச் 6 – நாளை முதல் PICKids திட்டத்தின் கீழ், சிறார்களுக்கு சினொவெக் கோவிட் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தொடங்குமென சுகாதார துணையமைச்சர் டத்தோ டாக்டர் நூர் அஸ்மி கசாலி தெரிவித்தார்.
சுகாதாரம் காரணமாக பைஃசர் தடுப்பூசி எடுத்துக் கொள்ள முடியாத சிறார்களுக்கு மட்டுமே சினொவெக் செலுத்தப்படும். அத்துடன் தங்களது பிள்ளைகளுக்கு ஃபைசருக்குப் பதிலாக சினொவெக் செலுத்திக் கொள்ள விரும்பும் பெற்றோர்களுக்கும் அந்த தேர்வு வழங்கப்படுமென அவர் கூறினார்.
நாட்டில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட கோவிட் தடுப்பூசி மையங்களில் , முன் பதிவு இன்றி walk in முறையில் சிறார்களுக்கு சினொவெக் தடுப்பூசி செலுத்தப்படும். அந்த மையங்கள் குறித்த விபரங்களை சுகாதார அமைச்சின் அகப்பக்கம் அல்லது PHCorp அகப்பக்கத்தின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.
PICKids திட்டத்தின் கீழ் சிறார்களுக்கு வழங்கப்படும் சினொவெக் தடுப்பூசி இலவசமாகும். இவ்வேளையில், தனியார் கிளினிக் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர் கட்டணம் செலுத்தி சினொவெக் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமென துணையமைச்சர் கூறினார்.