ஜெலெபு, ஆகஸ்ட்-17, நாடு முழுவதும் நின்று நின்று செல்லும் பேருந்து சேவை இனி இளஞ்சிவப்பு வர்ணத்திலான புதியப் பேருந்துகளுக்கு மாறவுள்ளது.
பொது பேருந்து போக்குவரத்து முறை மீதான உருமாற்றுத் திட்டங்களின் ஒரு பகுதியாக அது அமைவதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் (Anthony Loke) தெரிவித்தார்.
எனவே புதிய சேவை வழங்குநர் கட்டாயம் அப்புதியப் பேருந்துகளை தயார் செய்திட வேண்டும்; இல்லையேல் நடவடிக்கைக்கு ஆளாக வேண்டி வரும் என அவர் எச்சரித்தார்.
இளஞ்சிவப்பு வர்ணம் கலகலப்பான சூழலைப் பிரதிபலிக்குமென அதன் புதிய வடிவமைப்பாளர் பரிந்துரை செய்தார்.
முன்பிருந்தவையெல்லாம் சற்று அடர்த்தியான வர்ணத்தில் வசீகரமின்றி இருந்த காரணத்தினால், புதியப் பேருந்துகளைப் பிரகாசமான வர்ணத்திற்கு மாற்றியுள்ளோம்.
தூரத்தில் வரும் போதே பேருந்துகளைப் பயணிகள் அடையாளம் கண்டுகொள்ளவும் அது எளிதாக அமையுமென அமைச்சர் சொன்னார்.
தொடக்கமாக நெகிரி செம்பிலானில் அறிமுகமாகியுள்ள இந்த பேருந்து உருமாற்று திட்டம், தீபகற்பத்தில் RapidKL பேருந்து சேவையில் உள்ள கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு தவிர்த்து மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் பின்னர் விரிவுப்படுத்தப்படும்.