ஷா அலாம் , ஜன 3 – கலை நிகழ்ச்சி அனுமதிக்கான விண்ணப்பத்தை உடனடியாக ஒத்திவைக்கவிருப்பதாக போலீசார் அறிவித்துள்ளனர்.
கலை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் அளிக்கும் உத்தரவாதத்தில் காவல்துறை திருப்தி அடையும் வரை அது தொடர்பான அனுமதி ஒத்திவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ Hussein Omar Khan தெரிவித்தார்.
கலைநிகழ்ச்சிகளில் போதைப்பொருள் ஊடுருவுவதை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்மிக்கையை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அளிக்க வேண்டும். இந்த அம்சம் தோல்வியுற்றால் மரணத்தில் முடிவடையும் எந்த இசை நிகழ்ச்சியையும் நடத்த அனுமதிக்க முடியாது என அவர் கூறினார்.
தற்போது, கலைநிகழ்ச்சியை நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்களின் உறுதிப்பாட்டை நாங்கள் பெறும் வரை, போலீஸ்துறை அனைத்து அனுமதியையும் நிறுத்தி வைக்கிறது அல்லது தாமதப்படுத்துகிறது என்று இன்று சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது உசேய்ன் தெரிவித்தார்.
அனுமதி வழங்குவதற்கு முன், கலைநிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் வசதிக்கு ஏற்ப மக்கள் கூட்டத்திற்கான கொள்ளளவு , காற்றோட்டம் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் உட்பட பல அம்சங்களையும் போலீசார் கவனிப்பார்கள் என்று அவர் கூறினார்.