சிங்கப்பூர், ஆகஸ்ட்-17, இங்கிலாந்தின் பிரபல கால்பந்து கிளப்பான நியூகாசல் யுனைட்டெட்டை (Newcastle United) வாங்கும் முயற்சியில், போலி ஆவணங்கள் மூலம் வங்கி மோசடியில் ஈடுபட்ட சிங்கப்பூர் தொழிலதிபருக்கு சுமார் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நியூகாசலின் பங்குத்தாரர்களுக்கு பெரும் பணம் கொடுக்க வேண்டியிருந்ததால், 6 வங்கிகளிடம் நெல்சன் லோ (Nelson Loh) கடன்களுக்கு விண்ணப்பித்துள்ளார்.
ஆனால் அங்கு தான் அவரின் ‘தில்லாலங்கடி’ வேலையே தொடங்கியது.
தன் நிறுவனத்தில் வேலை செய்யும் பால்ய சிநேகிதருடன் கூட்டுச் சேர்ந்து நிதி ஆவணங்களைப் போலியாகத் தயாரித்து கடன்களுக்கு விண்ணப்பித்துள்ளார்.
வங்கிகளும் அந்த ஆவணங்களை நம்பி மலேசிய ரிங்கிட்டுக்கு 23 கோடியை கடனாக கொடுத்து விட்டன.
பிறகு எப்படியோ அவர்களின் மோசடி தெரிய வந்து, போலீசில் சிக்குவதற்குள்,
2020 செப்டம்பரில் தனியார் ஜெட் விமானத்தில் இருவரும் சீனாவுக்குத் தப்பியோடினர்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட 45 வயது நெல்சனுக்கு 15 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
உடந்தையாக இருந்த பள்ளி நண்பர் மைக்கல் வோங் (Michael Wong) 8 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத்தண்டனைப் பெற்றார்.
இருவரும் சீனாவில் கைது செய்யப்பட்ட நாளான 2022 நவம்பர் 15-லிருந்து சிறைத்தண்டனை தொடங்குமென நீதிமன்றம் அறிவித்தது.