
சிலாங்கூர், குவாலா சிலாங்கூரிலுள்ள, புக்கிட் மலாவத்தி சுற்றுலாத் தளம், கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி மறுசீரமைப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த காற்றுடன் கூடிய அடை மழையைத் தொடர்ந்து, புக்கிட் மலாவதியிலுள்ள, 50 ஆண்டுகள் பழைமையான மரம் ஒன்று சாய்ந்ததால், அங்கு நிலச்சரிவு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. அச்சம்பவத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட பகுதியில், நில நகர்வும், மண் சரிவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, புக்கிட் மலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜுவைரியா ஜுல்கிப்லி தெரிவித்தார். அதோடு, அடை மழை காரணமாக நிலம் மிருதுவாகி, நிலைத்தன்மையை இழந்து காணப்படுகிறது. தற்சமயம், தீயணைப்பு வீரர்களும், பொது பாதுகாப்பு படை உறுப்பினர்களும் சம்பந்தப்பட்ட பகுதியில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.