
இந்தியா, ஆகஸ்ட் 23 – நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் சாதனத்தை இன்று வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வை இஸ்ரோ நேரலை செய்கிறது.
சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள ‘புரபல்ஷன் மாட்யூல்’ எனப்படும் உந்து கலத்தில் இருந்து லேண்டர் சாதனம் கடந்த 17ஆம் தேதி பிரிந்து சென்றது.
இதையடுத்து நிலவில் இன்று மாலை இந்திய நேரப்படி 3.30 மணிக்கு தரை இறங்குகிறது.
விக்ரம் என பெயரிடப்பட்ட லேண்டர், நிலவில் தரை இறங்கியவுடன் அதன் உள்ளே இருந்து பிரக்யான் எனப்படும் ரோவர் வாகனம் வெளியே வந்து நிலவின் மேற்பரப்பில் சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்ளும்.
நிலவில் இதுவரை ஆய்வு மேற்கொள்ளப்படாத அதன் தென் துருவத்தை ஆய்வு செய்யும் முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்க உள்ளது.
ரஷ்யா அண்மையில் அனுப்பிய, லுானா – 25 விண்கலத்தில் இருந்த லேண்டர் சாதனம் கட்டுப்பாட்டை இழந்து நிலவில் மோதியது.
இதனால் ரஷ்யாவின் நிலவை ஆய்வு செய்யும் திட்டம் தோல்வியடைந்த நிலையில்,
சந்திரயான்-3 திட்டத்தின் செயல்பாடுகளை உலக நாடுகள் உற்று நோக்கியுள்ளன.