கோலாலம்பூர், நவம்பர்-20 – நில அமிழ்வு சம்பவத்தால் பொது மக்களுக்கு மூடப்பட்டிருந்த கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜித் இந்தியா சாலையின் ஒரு பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 10 முதல் திறக்கப்பட்ட அப்பகுதி, ஜாலான் மஸ்ஜித் இந்தியா போலீஸ் குடில் மற்றும் வணிகத் தளங்களுக்கு இடையிலான பாதையை உட்படுத்தியுள்ளது.
அங்கு நில அமைப்பு மீதான ஆய்வுப் பணிகளும், பழுதுப் பார்ப்புப் பணிகளும் நிறைவடைந்துள்ளதை அடுத்து, அப்பாதை திறக்கப்பட்டதாக கோலாலம்பூர் மாநகர மன்றம் DBKL கூறியது.
இதுநாள் வரை பொறுமைக் காத்து ஒத்துழைப்பு வழங்கிய பொது மக்களுக்கும் DBKL நன்றித் தெரிவித்துக் கொண்டது.
இவ்வேளையில், Wisma Melayu கட்டடமருகே நில அமிழ்வு ஏற்பட்ட இடம், பழுதுப்பார்ப்புப் பணிகளுக்காக தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.
அனைத்தும் திட்டமிட்டபடி நிறைவடைந்தால், முன்கூட்டியே வரும் டிசம்பர் இறுதிக்குள் அப்பகுதி முழுவதுமாகத் திறக்கப்படும் என DBKL நம்பிக்கைத் தெரிவித்தது.
முன்னதாக, அடுத்தாண்டு பிப்ரவரி வாக்கில் தான் அப்பகுதியைத் மீண்டும் திறக்க அட்டவணையிடப்பட்டிருந்தது.
ஆகஸ்ட் மாத இறுதியில் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிலம் உள்வாங்கியதில், இந்தியப் பிரஜையான 48 வயது விஜயலட்சுமி என்பவர் விழுந்து காணாமல் போனார்.