
புத்ராஜெயா, மார்ச்-29- மத்திய மியன்மாரையும் வட தாய்லாந்தையும் உலுக்கிய சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் உயிரிழந்த மக்களின் குடும்பங்களுக்கு, மலேசியா ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துக் கொண்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில் ஆசியான் உணர்வுடன் அவ்விரு அண்டை நாடுகளுக்கும் மலேசியா பக்கபலமாக இருக்குமென, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
காயமடைந்தவர்களும் விரைவிலேயே நலம் பெற பிராத்திப்பதாக அவர் சொன்னார்.
இந்நிலையில் மியன்மாரிலும் பேங்கோக்கிலும் நடைபெறும் மீட்புப் பணிகளுக்கு தேவை அடிப்படையில் உதவிக்கரம் நீட்ட மலேசியா தயாராக உள்ளது என்றார் அவர்.
இப்பேரிடரிலிருந்து அவ்விரு நாடுகளும் விரைவிலேயே மீண்டு வர வேண்டுமென்றும் டத்தோ ஸ்ரீ அன்வார் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்தார்.
நேற்று மதியம் ரிக்டர் அளவைக் கருவியில் 7.7-ழாக பதிவாகிய நில நடுக்கத்தில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
மியன்மாரில் 144 பேரும் பேங்கோக்கில் 10 பேரும் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட இடங்களில் அவசரகாலம் அறிவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன.