
லங்காவி, ஜன 17 – லங்காவியில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில், நீச்சல் தெரியாததால் , நீரில் மூழ்கி, நுரையீரலில் நீர் கோர்த்ததால் , அப்படத்தின் கதாநாயகன் விஜய் ஆண்டனி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நீரில், கதாநாயகியோடு காட்சியயை படமெடுத்துக் கொண்டிருந்தபோது, விஜய் ஆண்டனி செலுத்திய Jet Ski கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. நீருக்குள் விழுந்த அவருக்கு நீச்சல் தெரியாததோடு, அவர் Life Jacket , உயிர் காக்கும் அங்கியையும் அணிந்திருக்கவில்லை என தெரிய வந்திருக்கிறது.
இவ்வேளையில், அங்கிருந்த படப்பிடிப்பு குழுவினரால் உடனடியாக காப்பாற்றப்பட்டு லங்காவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விஜய் ஆண்டனியின் உடல் நிலை சீராக இருப்பதாக, பிச்சைக்காரன் பட தயாரிப்பாளர் தனஞ்செயன் டிவீட் செய்திருக்கிறார் . விஜய் ஆண்டனி குணமடைந்து விரைவில் படப்பிடிப்பிற்கு திரும்புவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வேளையில், விஜய் ஆண்டனியின் குடும்பத்தினர் மலேசியா வந்துள்ளனர். லங்காவியிலிருந்து சிகிச்சைக்காக கோலாலம்பூர் கொண்டு வரப்படும் சாத்தியத்தை அவர்கள் மருத்துவரோடு கலந்து பேசவுள்ளனர். மருத்துவர் ஆலோசனையின்படி ஓரிரு நாட்களுக்கு கழித்து சென்னைக்குத் கொண்டு செல்லும் வாய்ப்பையும் குடும்பத்தார் ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது.